ஏழ்மையில் இனிமை
கொட்டும் மழையிலும் கொழுத்தும் வெயிலிலும்
அப்பாவுக்குதவியாய் அண்ணனும் தம்பியும்
அவர்களின் ஆடையை அக்கா துவைத்திட
அன்பும் அன்னமும் அன்னையின் கைகளில்
அப்பாவின் கண்களோ சிந்தனை அலைகளில்
அடுத்த வியாழன் வருடம் பிறக்குதாம்
புத்தாடை தானே, தம்பிக்கே போடுவோம்
விட்டுக் கொடுப்பினில் இமயம் தோற்குமே
ஒடியல் கூழடா இன்று மதியம்
ஓடுவான் ஒருவன் முட்டுக்காய் பறிக்க
மற்றவன் ஓடுவான் மச்சம் வாங்கிட
வட்டமாய் அமர்ந்து சோக்கான கூழடா
அப்பா தம்பிக்கு வயித்துக்கை குத்துதாம்
பறந்தார் அப்பா பரியாரி மருந்துக்காய்
அம்மாவின் மடியினில் தம்பியின் தலையது
அண்ணானின் கைகளோ தம்பியின் வயிற்றினில்
கண்களில் நீரும் கைகளில் கோப்பியும்
கனிவும் கவலையும் அக்காவின் முகத்தில்
அப்பா வந்திட மருந்தும் வந்தது
தம்பி நிமிர்ந்திட வீடே சிரித்தது
பள்ளிக் கூடத்தில் பரிசளிப்பு விழா
தம்பியின் கைகளில் எட்டுப் பரிசுகள்
அப்பா சொன்னார் - well done my son
அன்பாய் வாழ்த்தி அனைவரும் மகிழ்ந்தனர்
இன்பத்தில் சிரித்தனர் எல்லோரும் ஒன்றாய்
இடுக்கண் வருகையில் இதமாய் இருந்தனர்
அழகாய் உழைத்தனர் அன்பாய் இருந்தனர்
உறவைப் போற்றினர் உண்மையாய் இருந்தனர்
No comments:
Post a Comment